Friday, October 11, 2013

உலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பெல்ஜியம் அணி தகுதி பெற்றது. பிரேசிலில், 20வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். "ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு "டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை, இத்தாலி (பி பிரிவு), ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. "சி' பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஜெர்மனி, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. "டி' பிரிவில் நடந்த போட்டியில், நெதர்லாந்து அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. "இ' பிரிவில் நடந்த போட்டியில், சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்பனியாவை வீழ்த்தியது. போர்ச்சுகல், இஸ்ரேல் அணிகள் மோதிய "எப்' பிரிவு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது. "ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியை தோற்கடித்தது. அர்ஜென்டினா அபாரம்: தெற்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. வடக்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை வீழ்த்தியது. மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது.

No comments: