Wednesday, June 24, 2009

கொதிக்கும் நெய்யில் கைகளால் பணியாரம் சுட்ட தம்பதி



திருவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் கணவன், மனைவி இருவரும் கொதிக்கும் நெய்யில் பணியாரம் சுட்டனர். இதைக் காண ஏராளமானோர் திரண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் முத்து இருளாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும். கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக சாமியாடியும், அவரது மனைவியும் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு குழிப்பணியாரம் சுடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் சாமியாடி ஆறுமுகப்பெருமாள்(55), மனைவி சுந்தரம்மாள்(50) ஆகியோர் பணியாரம் சுடத் தயாராகினர்.
மேளங்கள் முழங்க, பெண் பக்தர்கள் குலவை ஒலியெழுப்ப மாவை எடுத்து கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பணியாரம் சுட தொடங்கினர்.
கரண்டி எதுவுமின்றி பணியாரத்தை கையால் எடுத்து சேகரித்தனர். விடிய, விடிய ஆயிரத்துக்கும் அதிகமான பணியாரங்களை சுட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி அதிகாலை 4 மணி வரை நடந்தது. பின்னர், சாமிக்கு பணியாரங்கள் படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து சாமியாடி ஆறுமுகப்பெருமாள் கூறுகையில், ‘Ôஇந்த கோயிலில் பரம்பரையாக பணியாரம் சுடுகிறோம். 1982ம் ஆண்டு முதல் 27 ஆண்டாக பணியாரம் சுடுகிறேன்Ó என்றார்.

No comments: