Tuesday, January 20, 2009

'விலங்கு நேயம்'



ஆறறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டே சகமனிதர்
மீது வெறுப்பை உமிழ்வது "மனிதநேய'த்தின் தற்போதைய
இலக்கணமாகிவிட்டது. ஆனால், பரம எதிரியான பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வளர்க்கிறது நாய் ஒன்று. இந்த "விலங்குநேய' காட்சியை திருப்பூரில் காண்பவர்கள் அதிசயிக்கின்றனர். திருப்பூர், வெள்ளியங்காடு, முத்துவிநாயகர் கோவில் வீதியில்
வசிப்பவர் சொக்கப்பன்; இவரது நாய், வீட்டிலுள்ள 22 நாட்களே ஆன பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கிறது. பூனைக்குட்டி பசிக்காக "மியாவ்' என்று குரல் கொடுக்கும்போதெல்லாம் ஓடிச்சென்று பால் கொடுக்கிறது, நாய்.சொக்கப்பன் பெட்டிக்கடை நடத்துகிறார். இவர் "பப்பி' என்ற இந்த நாயை 13 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். "பப்பி' ஏற்கனவே 22 தடவை குட்டிகளை ஈன்றுள்ளது; ஒரு மாதத்துக்கு முன் இரண்டு குட்டிகளை ஈன்றது.பத்து நாட்களுக்கு முன் சொக்கப்பன் வீட்டில் பூனை ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று சென்றது. அதில் ஒரு
குட்டியை பக்கத்து வீட்டுக்காரர் பராமரித்து வருகிறார்.


சொக்கப்பன், தன் வீட்டில் இருக்கும் பூனைக்குட்டிக்கு பால்
வைத்தபோது, குடிக்கவில்லை. இந்நிலையில், நாய் "பப்பி'யிடம்
பூனைக்குட்டி பால் குடிப்பதை சொக்கப்பன் பார்த்து
ஆச்சரியப்பட்டார். பசியெடுக்கும்போது, பூனைக்குட்டி "மியாவ்'
என்று குரல் கொடுக்கிறது. அதைக் கேட்டதும், "பப்பி'
எங்கிருந்தாலும் ஓடிச் சென்று பூனைக்குட்டிக்கு பால்
கொடுக்கிறது. பூனைக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவல்
பரவியதால், அப்பகுதி மக்கள் சொக்கப்பன் வீட்டுக்குச் சென்று
நாயையும், பூனைக்குட்டியையும் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.

No comments: